திமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே அரண்மனைப்புதூரில், திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், இன்னும் 4 மாதங்களில் திமுக ஆட்சிக்கு வரும் என்றார். அதன்பிறகு விவசாயிகளின் வங்கிக்கடன் மற்றும் பெண்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து படித்த இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.







