“நிலுவையில் உள்ள மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” – அமைச்சர்

சென்னையில் நிலுவையில் உள்ள மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கட்டுமான பணியில் உள்ள மேம்பாலங்கள், சுரங்க பாதை, நடைமேம்பாலம் உள்ளிட்டவற்றை நெடுஞ்சாலைத்துறை…

சென்னையில் நிலுவையில் உள்ள மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கட்டுமான பணியில் உள்ள மேம்பாலங்கள், சுரங்க பாதை, நடைமேம்பாலம் உள்ளிட்டவற்றை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக வேளச்சேரி மேம்பாலம், மேடவாக்கம் மேம்பாலம், தாம்பரம் நடை மேம்பாலம், குரோம்பேட்டை, கோயம்பேடு ஆகிய இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “கோயம்பேடு பாலம் மற்றும் வேளச்சேரி மேம்பாலப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். பொதுமக்கள் பாலங்களை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். மழைக்காலம் என்பதால் மழையில்லாத நேரங்களில் இரவு நேரத்தில் விரைந்து சாலைகள் மற்றும் மேம்பாலம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளேன்.”

“மதுரைவாயல் மேம்பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படும். மேலும், PWD துறைக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் விரைவில் திறக்கப்படும். தமிழகத்தில் உள்ள எல்லா பாலங்களையும் திமுகதான் கட்டியது. அதே போல வரும் காலங்களில் தேவைப்பட்டால் பாலங்கள் மக்களுக்குக் கட்டித்தரப்படும். மதுரையில் நூலகம் கட்டுவதற்கான அறிவிப்பு ஏற்கனவே வந்து இருந்தது. அதைத் தொடர்ந்து மதுரையில் அதற்காக 6 இடங்களைத் தேர்வு செய்துள்ளோம். அதில் மூன்று இடங்கள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.” என அமைச்சர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.