விஸ்வரூபம் எடுக்கும் பெகாசஸ்; ராகுல் தனி வியூகம்

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி..க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி..க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வது குறித்து, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தலைமையில் மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், விஜய் வசந்த், திமுக சார்பில் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்துக்குப்பின், டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி எதிர்கட்சி தலைவர்கள் சைக்கிளில் பயணம் மேற்கொண்டனர். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற பாஜக குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், அது தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.