கார் விபத்தில் தோழி பவானி உயிரிழந்ததை அறிந்த பின்னர், நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா. இவர் கடந்த 24-ம் தேதி நள்ளிரவு, புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை வரும்போது, கிழக்கு கடற்கரை சாலையில் இவரது கார் விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிவந்த நடிகை யாஷிகா படுகாயமடைந்தார். அவருடன் பயணித்த தோழியான, ஹைதராபாத்தை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த யாஷிகாவின் நண்பர்கள் இருவர் காயமடைந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கால் மற்றும் இடுப்பு எலும்பு முறிவு காரணமாக, நடிகை யாஷிகாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நடிகை யாஷிகா தனது இன்ஸ்டாகிராமில், ஆயுள் முழுவதும் தான் உயிர் வாழ்வதை எண்ணி வருத்தப்படுவேன் என்றும், ஒவ்வொரு நொடியும் தோழி பவானியை எண்ணுவேன், அவளது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.








