திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் துவக்கம்..!

வருடத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று துவங்கியது. இறை மூர்த்திகளுக்கு நைவேத்தியம், தூப தீப சமர்ப்பணம், அலங்காரம் ஆகியவை உள்ளிட்ட கைங்கரியங்களை எவ்விதமான குறைபாடுகளும் இல்லாமல் செய்து முடிப்பது…

வருடத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் திருப்பதி ஏழுமலையான்
கோவிலில் இன்று துவங்கியது.

இறை மூர்த்திகளுக்கு நைவேத்தியம், தூப தீப சமர்ப்பணம், அலங்காரம் ஆகியவை
உள்ளிட்ட கைங்கரியங்களை எவ்விதமான குறைபாடுகளும் இல்லாமல் செய்து முடிப்பது இந்திராதி தேவர்களுக்கும் இயலாத காரியம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவிலில் குடி கொண்டிருக்கும் இறை மூர்த்திகளுக்கு தூபதீப
நெய்வேத்திய சமர்ப்பணம், அலங்காரம், உற்சவங்கள், பூஜைகள் ஆகியவற்றை சாதாரண மனிதர்களான அச்சகர்கள் குற்றம் குறைபாடுகள் இல்லாமல் செய்து முடிக்க இயலாது.

தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் இத்தகைய குற்றம் குறைபாடுகள் காரணமாக
கோவில்களில் குடி கொண்டிருக்கும் இறை மூர்த்திகளுக்கு பாதிப்புகள் ஏற்படும்
என்று ஆகமங்கள் கூறுகின்றன. எனவே ஒவ்வொரு ஆண்டும் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் இத்தகைய குறைபாடுகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்.

இதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் வருடத்தில் மூன்று நாட்கள் பவித்ரோற்சவம் என்ற பெயரில் பரிகார உற்சவம் நடத்தப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் நடைபெறும்.

இந்த நிலையில் இன்று ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவம் இன்று துவங்கியது. பவித்றோசவத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஏழுமலையான் கோவிலில் உள்ள சம்பங்கி பிரகாரம் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு அபிஷேகம், ஆராதனை, தீப தூப நெய்வேத்திய சமர்ப்பணம் ஆகியவற்றை நடத்தி தேவஸ்தான அர்ச்சகர்கள் பவித்ரா ஆவாகனம் செய்வித்தனர்.

தொடர்ந்து மாலை உற்சவர்களின் மாட வீதி ஊர்வலம் திருப்பதி மலையில் நடைபெற
உள்ளது. பவித்றோட்சவத்தின் இரண்டாம் நாளான நாளை பவித்ர பிரதிஷ்டையும், மூன்றாம் நாளான நாளை மறுநாள் பவித்ர பூர்ணாகுதியும் நடைபெற உள்ளது.
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு கோவிலில் இன்று வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம் ஆகிய கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இரண்டாம் நாளான நாளை சகஸ்ர கலசாபிஷேகமும், நிறைவு நாளான நாளை மறுநாள் திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண
பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகிய கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.