சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவில்
மருந்தாளுநர்கள் போதுமான அளவில் இல்லாததால், நோயாளிகள் 3
மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டு 11 ஆண்டுகளை கடந்து உள்ளது. மேலும், இங்கு வெளி நோயாளிகள் பிரிவு, 300 படுக்கையறை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நல பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி உள் நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், வெளி நோயாளிகள் பிரிவில் தினசரி 1200க்கும்
மேற்பட்டோரும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள புதுக்கோட்டை,
ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து
சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள வெளிநோயாளிகள்
பிரிவில் மருந்து மாத்திரைகள் வழங்க ஒரு இடம் மட்டுமே உள்ளது. அதிலும் வெறும்
5 நபர்கள் மட்டுமே மருந்தாளுநராக பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு 14 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில், வெறும் 5 பேர் மட்டுமே பணிபுரிந்து
வருகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் சுமார்
3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகிறது. இதன் காரணமாக, நீண்ட வரிசையில்
நோயாளிகள் காத்திருக்கும் அவலம் நிலவுகிறது.
-கு. பாலமுருகன்







