வசூல் சாதனை படைக்கும் ‘பதான்’ – கொண்டாட்டத்தில் ஷாருக்கான் ரசிகர்கள்!

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் ‘பதான்’ திரைப்படத்தால், ஷாருக்கான் ரசிகர்கள்  கொண்டாட்டத்தில் உள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் ஜனவரி…

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் ‘பதான்’ திரைப்படத்தால், ஷாருக்கான் ரசிகர்கள்  கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியானது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

பதான் படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியானதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியது கடும் சர்ச்சைக்கு உள்ளானது.  பதான் படத்திற்கு வலது சாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின.

பல்வேறு  எதிர்ப்புகளுக்கு இடையே ஜனவரி 25ம் தேதி  உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் பதான் திரைப்படம் வெளியானது.  சமீபகாலமாக இந்தி திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் பதான் படத்தின் ரிசல்ட் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியது.

பல ஆண்டுகளுக்குப் பின் ஷாருக்கான் திரைப்படம் திரைக்கு வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்தி, தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான பதான் வசூலை குவித்து வருகிறது. படம் வெளியான 2  நாட்களில் 219.60 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக பாலிவுட்டின் பிரபல சினிமா விமர்சகர் டாரன் ஆதர்ஷ் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்தியாவில் மட்டும் படத்தின் மொத்த வசூல் கிட்டத்தட்ட 419 கோடி என கூறப்படுகிறது. இதன் மூலம் பதான் இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில்  இரண்டாவது இடம் பிடித்ததோடு சல்மான்கானின் ‘பஜ்ரங்கி பைஜான்’ மற்றும் அமீர்கானின் ‘தங்கல்’ ஆகிய படங்களின் வசூலையும் தாண்டியுள்ளது.

அத்துடன், இந்த வாரம் பெரிய ரிலீஸ் எதுவும் இல்லாத நிலையில் படத்தின் வசூல் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த வாரம் வெளியாகும், கார்த்திக் ஆர்யன் நடித்துள்ள ‘ஷேஜாதா’ ஆகிய படங்களால் ‘பதான்’ படத்தின் வியாபாரம் பாதிக்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.