‘பதான்’ திரைப்படத்தை தடை செய்யவும், புறக்கணிக்கவும் அழைப்பு விடுத்த சிலர் , சும்மா ‘குரைப்பவர்கள்’ மட்டும் தானே தவிர , ‘கடிக்கமாட்டார்கள்’ என நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் மிக சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் காட்டாத மனிதர். அண்மையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாத்ருபூமி சர்வதேச கடிதத் திருவிழாவில் கலந்து கொண்ட அவர், நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர் ‘பதான்’ திரைப்படத்தை தடை செய்யவும், புறக்கணிக்கவும் சிலர் அழைப்பு விடுத்திருந்தனர், ஆனால் இத்தகைய நபர்கள் சும்மா ‘குரைப்பவர்கள்’மட்டும் தான், ‘கடிக்கமாட்டார்கள்’ என்று கூறினார்.
மேலும் பதான் படம் ரூ.700 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரகாஷ்ராஜ், இந்தப் படத்தை எதிர்த்தவர்களால் பிரதமர் நரேந்திர மோடி படத்திற்கு ரூ.30 கோடி கூட வசூல் செய்ய முடியவில்லை. அவர்கள் ஒலி மாசுபாடு மட்டும் தான் என விமர்சித்தார்.
விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ குறித்தும் பேசிய அவர், “காஷ்மீர் பைல்ஸ் முட்டாள்தனமான படங்களில் ஒன்று. அதோடு அதை தயாரித்தவர் யார் என்பதும் நமக்குத் தெரியும். இவர்களுக்கு வெட்கமே இல்லை. அந்தப் படத்தைப் பார்த்து சர்வதேச கலைஞர்கள் காறி துப்பினர். இருந்தும் தனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை என்று இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி கேட்டு குமுறுகிறார். இதற்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது என கடுமையாக பேசியுள்ளார்.
பதான் படத்தில் இடம்பெற்றுள்ள ‘பேஷாராம் ரங்’ பாடல் சர்ச்சையில் சிக்கி பல விமர்சனங்களை சந்தித்த நேரத்திலேயே பதான் பாடலுக்கு எதிரான கருத்துகளுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பேசியுள்ள இந்த பேச்சு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.
- பி. ஜேம்ஸ் லிசா









