எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்ய முடியாததை ஷாருக்கானின் ’பதான்’ திரைப்படம் செய்துள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியானது. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கானும் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பதான் திரைப்படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியானது முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தீபிகா படுகோன் காவி நிறத்தில் கவர்ச்சி உடை அணிந்து பேஷாரம் ரங் பாடலில் தோன்றியதாக, கடும் சர்ச்சை எழுந்தது. மேலும் பதான் படத்திற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின.
சமீபகாலமாக இந்தி திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் பதான் படத்தின் ரிசல்ட் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு தீனி போடும் விதமாக, பதான் திரைப்படம் உலகளவில் வசூல் வேட்டை நடத்தியது. ஏறத்தாழ 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசிய டெரெக் ஓ பிரையன், இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய தூதர்களாக வலம் வரும் பாலிவுட் நடிகர்களுடன் மோத நினைக்காதீர்கள். எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்ய முடியாததை, ஷாருக்கான், டிம்பிள் கபாடியா, ஜான் ஆபிரகாம் ஆகியோரின் பதான் இந்நாட்டுக்கு காட்டியுள்ளது. அவர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம். பாலிவுட்டை புறக்கணிக்கச் சொன்னவர்களுக்கு ஒரு அழகான செய்தியுடன் கூடிய படத்தைக் காட்டியுள்ளனர்” என்று புகழ்ந்தார்.