பாலிவுட் நடிகரான ஷாருக்கான் நடிப்பில் வெளியான `பதான்’ திரைப்படம் நேற்று ஒருநாளில் மட்டும் சர்வதேச அளவில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜான் ஆப்ரஹாமும் சிறப்பு தோற்றத்தில் சல்மான் கானும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நேற்று உலகம் முழுவதும் சுமார் 100 நாடுகளில் கிட்டத்தட்ட 2500 திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியானது. இதுவரை வேறு இந்திய திரைப்படமும் இவ்வளவு அதிகமான நாடுகளில் அதிகமான திரையரங்குகளில் வெளியாகதது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் ஷாருக்கானின் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், நீண்ட நாளைக்குப் பிறகு ஷாருக்கான் திரைப்படம் திரைக்கு வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பதான் சிறந்த படமாக வந்திருப்பதாகவும் கூறினர்.
இந்தப்படம் வெளியான நேற்று ஒருநாள் மட்டும் சர்வதேச அளவில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் 57 கோடி ரூபாய் வசூலை பதான் திரைப்படம் குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் 100 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதால் இந்தியாவில் வெளியான நாளில் அதிக வசூலை பெற்ற திரைப்படமாக பதான் உள்ளது. இதற்கு முன்னர் கிருத்திக் ரோஷனின் வார் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலையும் கேஜிஎப் 2 திரைப்படம் 52 கோடி ரூபாயும் வசூலை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.







