நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் சிரமத்திற்கு உள்ளான பயணிகள்

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. இன்றும், நாளையும் நடைபெறும் வேலைநிறுத்தப்…

தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. இன்றும், நாளையும் நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்லும் பணியாளர்களும் பேருந்து இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், கூடுதலாக ஆட்களை ஏற்றி செல்வதாகவும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேபோல, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்பட வேண்டிய 448 பேருந்துகளில் 30 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும், தென்காசி பணிமனையில் இருந்து அரசு பேருந்துகள் முழுமையாக இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஆலங்குளம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டதால் கல்லூரி மாணவ மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதேபோல, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி உள்ளிட்ட 5 பணிமனைகளில் இருந்து 52% பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். அண்டை மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பேருந்துகளும் மிக குறைவான எண்ணிக்கையில் வந்ததால் பணிக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர். இதனால், அரசு பேருந்துகளைவிட தனியார் பேருந்துகளே அதிகளவில் இயக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

அண்மைச் செய்தி: ‘கோட் சூட்டை விட வெள்ளை சட்டையும், கரை வேட்டியும்தான் கௌரவம்’ – முதலமைச்சர்

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளம் செல்லும் பேருந்துகள், வேலைநிறுத்தம் காரணமாக எல்லைப் பகுதியான களியக்காவிளையில் நிறுத்தப்பட்டது. இதனால், மாவட்டத்திலும் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டதால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதேபோல, திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அதிகாலை முதலே அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல வேண்டி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால், பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்த வெளியூர் பக்தர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 79 அரசு பேருந்துகளும் இயங்காததால், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அரசு பேருந்துகள் இயங்காததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.