கோட் சூட்டை விட வெள்ளை சட்டையும், கரை வேட்டியும்தான் எப்போதும் கௌரவம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துபாயில் இருந்து திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பரவ வேண்டும் என்ற நோக்கத்துடன் துபாய் பயணத்தை மேற்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டிற்கான முதலீடுகளுக்குரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதையும், ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், தமிழ்நாடும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து முடிவு செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தனது பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைத்தாலும், பொதுமக்களும், மாற்றுக் கட்சியினரும் மனதளவில் பாராட்டுவதாக தெரிவித்த அவர், மார்ச் 26-ஆம் தேதி முதலீட்டாளர் மாநாட்டில் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றக்கூடிய வகையில் செயல்படுவதாக கூறியதையும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
துபாயில் பன்னாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றபோது கோட் – சூட் உடை அணிந்திருந்தாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்ச் சொந்தங்களை சந்திக்கும் நிகழ்வின் போது வேட்டி – சட்டை அணிந்து சென்றதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், கோட் சூட்டை விட வெள்ளை சட்டையும், கரை வேட்டியும்தான் எப்போதும் கெத்து என்றும் எந்நாளும் கௌரவம் என்றும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்
கடல் கடந்து சென்று, கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்று, திரைகடலோடித் திரவியம் தேடும் தமிழ்ப் பண்பாட்டின் வழியே பயணித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தமிழர்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திமுகவின் லட்சியம் என கூறியுள்ளார். மேலும், தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அரணாக விளங்கும் அரசுதான் திமுக அரசு என கூறியுள்ள அவர், பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் அரசு முனைப்புடன் உள்ளதாகவும், அமீரகப் பயணம் முழு வெற்றி பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








