சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட பயணிகள் மின்சார ரயில்- அடுத்தடுத்த விபத்துகளால் அதிர்ச்சியில் பயணிகள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மின்சார ரயில், பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, திருவள்ளூர் நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட மின்சார ரயிலின்…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மின்சார ரயில், பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, திருவள்ளூர் நோக்கி பயணிகளுடன் புறப்பட்ட மின்சார ரயிலின் ஒரு பெட்டி பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதையடுத்து, உடனடியாக ரயிலை நிறுத்திய ஓட்டுநர், சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.  பின்னர், அதிர்ச்சியடைந்த அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அலறி அடித்து ரயில் பெட்டியில் இருந்து வெளியேறினார்.

பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பெட்டியின் 4 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தடம் புரண்ட ரயில் பெட்டியில் இருந்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனை தொடர்ந்து, பின்னால் வந்த மற்றொரு ரயிலை சிவப்பு கொடி காண்பித்து நிறுத்தியதால், பெரும் அசம்பாவித சம்பவம் நிகழாமல் தடுக்கப்பட்டது. தடம் புரண்ட ரயிலால் அந்த பாதை வழியாக வரக்கூடிய அனைத்து ரயில்களும் செயல்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமைதான் சென்ட்ரலில் இருந்து பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு திரும்பிச் சென்ற சதாப்தி விரைவு ரயில், இதே பேசின் பிரிட்ஜ் அருகில் தடம் புரண்டது. ரயிலில் பயணிகள் இல்லாமல் இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கபப்ட்டது. இந்த நிலையில், அடுத்த 2 நாட்களில் இதேபோன்றொரு விபத்து சம்பவம் நடந்துள்ளது பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பி.ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.