மானாமதுரை பேருந்து நிலையத்தில் பேருந்து புறப்படும் நேரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பயணியை ஓட்டுநரும், நடத்துநரும் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேருந்து நிலையத்தில் இரவு 9.30 மணி அளவில் அரசு பேருந்து எண் 18 நின்று கொண்டிருந்தது. பேருந்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர். அப்போது பயணி ஒருவர் ஓட்டுநரிடம் பேருந்து எப்போது புறப்படும் என கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பயணிக்கும், பேருந்து ஓட்டுநருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு அடிதடி ஆனது. அப்போது அங்கிருந்த நடத்துநரும் அந்த பயணி மீது தாக்குதல் நடத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டனர். விசாரணையில், உணவு அருந்திக் கொண்டிருந்த போது பயணி தகாத வார்த்தையில் பேசியதாக ஓட்டுநரும் நடத்துநரும் தெரிவித்துள்ளனர். பின்னர் இரு தரப்பையும் சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.







