ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதும் திமுகவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிகின்றன என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
அந்தமானின் போர்ட் பிளேயரில் வீர் சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது;
விமான முனையத்தின் தற்போதைய திறன் 4,000 சுற்றுலாப் பயணிகளைக் கையாளும் நிலையில், இந்த புதிய முனையத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 11,000 சுற்றுலாப் பயணிகளைக் கையாளும் திறன் பெற்றுள்ளது. அதிக விமானங்கள் மற்றும் அதிக சுற்றுலாப் பயணிகள் நேரடியாக அதிக வேலைவாய்ப்பைக் குறிக்கிறது. போர்ட் பிளேரின் இந்த புதிய முனையத்தின் மூலம், எளியையான பயணத்திற்கு வழி வகுக்கும். வணிகம் செய்வதற்கும் எளிமையானதாக அமையும். கடந்த 9 ஆண்டுகளில், பழைய அரசாங்கங்களின் தவறுகளைத் திருத்தியது மட்டுமின்றி, மக்களுக்கு புதிய வசதிகளையும் வழிகளையும் தற்போது ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இன்று, இந்தியாவில் ஒரு புதிய மாதிரி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் நம் நாடு வளர்ச்சியில் இந்தியா எங்கும் சென்றிருக்கலாம். ஏனெனில் இந்தியர்களாகிய நம் ஆற்றலுக்குப் எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. ஆனால் ஊழல் மற்றும் வம்ச, குடும்ப கட்சிகள் சாதாரண இந்தியனின் இந்தத் திறனுக்கு அநீதி இழைத்தன. இந்தியாவில் நீண்ட காலமாக, சில கட்சிகளின் சுயநல அரசியலால், பெரு நகரங்களின் வளர்ச்சி தடைபட்டது. மேலும் பழங்குடியினர் மற்றும் தீவுப் பகுதிகள் வளர்ச்சியை இழக்க நேரிட்டன.
தமிழகத்தில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சி அணிகள் திமுகவுக்கு ஆதரவு அளிக்கின்றன. பஞ்சாயத்து தேர்தலின்போது நடந்த வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் ஏன் பேசவில்லை. தற்போது ஊழலை ஊக்குவிக்கவே எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் கூட்டத்தை கூட்டியுள்ளனர். எது எப்படி இருந்தாலும் 2024ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பா.ஜ.க அரசை கொண்டு வர வேண்டும் என்று நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா








