முற்றும் புளூசட்டை மாறன் vs பார்த்திபன் மோதல்!

Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் எனும் வரலாற்று சாதனைக்கான லேபிளை தாங்கிக்கொண்டு திரைக்கு வந்திருக்கிறது பார்த்திபனின் ‘இரவின் நிழல்’. விமர்சகராக இருந்து இயக்குநராக உருவெடுத்துள்ள ப்ளூ சட்டை…

Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் எனும் வரலாற்று சாதனைக்கான லேபிளை தாங்கிக்கொண்டு திரைக்கு வந்திருக்கிறது பார்த்திபனின் ‘இரவின் நிழல்’. விமர்சகராக இருந்து இயக்குநராக உருவெடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன், நடிகராக இருந்து சினிமா விமர்சகராக உருவெடுத்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களாலும், விமர்சனங்களாலும், வாழ்த்துகளாலும் இப்படம் விடாது நனைந்து கொண்டிருக்கிறது.வெளியான மூன்று நாட்கள் ஆன நிலையில் எதிர்பார்ததைவிட பெரும் வசூலை ஈட்டியிருப்பதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

இத்தனை பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மத்தியில் ‘ப்ளூ சட்டை மாறன்’ என்று அழைக்கப்படும் இளமாறன் என்பவர் கொளுத்தி போட்ட சிறு நெருப்பொன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி புதியதொரு விவாதத்தை கிளப்பியுள்ளது. இரவின் நிழல் தொடர்பான தன்னுடைய விமர்சனத்தில், ‘ படக்குழுவினரின் கடுமையான முயற்சிகளையும், தொழில்நுட்ப ரீதியான மெனக்கெடல்களையும், உழைப்பையும் நிச்சயம் நாம் பாராட்டியே ஆக வேண்டும்’, என அம்பி போல தொடங்கியவர் சடாரென அந்நியனாக மாறி ‘இவ்ளோ மெனக்கெட்டு என்ன பிரயோஜனம்.. நீங்க ஒரு ஷாட்ல எடுத்தீங்களா, ஒரு லட்சம் ஷாட்ல படத்தை எடுத்தீங்களான்றதா ஆடியன்ஸோட பிரச்னை? அவங்க ரசிக்கும்படியான சுவாரஸ்யமான திரைக்கதையோ, காட்சியமைப்போ இருக்கணும். இந்த படத்துல அப்படி எதுவுமே இல்லை’ எனக்கூறி கறாராக இப்படத்தை பற்றி சாடுகிறார்.

மேலும், ‘ ஒரு சீன் முடிஞ்சி இன்னொரு சீன்க்கு மாறும் போது, கேமராவோட taplase-ஐ காட்ட நடுவுல குடை, சுவர்ன்னு காட்றாங்க. அந்த காட்சிலாம் ஒன்றவேயில்லை. சிங்கிள் ஷாட்-ஐ கதை டிமாண்ட் பண்ணவேயில்லை எனும் போது ஏன் அதை இவ்ளோ மெனக்கெட்டு படத்தை கெடுக்கணும்’ என்பது போலவும் சில கேள்விகளை முன்வைக்கிறார். இதையெல்லாம் தாண்டி, ‘இது உலகின் முதல் சிங்கிள் ஷாட் Non linear படமே இல்லை. 2013லேயே fish and cat எனும் ஈரான் படம் சிங்கிள் ஷாட் நான் லீனியரில் வெளியாகி விட்டது’ என ஒரே போடாக போட்டார் புளூ சட்டை மாறன்.
இதனைத் தொடர்ந்து பார்த்திபன் ஆதரவாளர்களும், ரசிகர்களும் போர் கொடி தூக்க மாறனின் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவிப்பது வரை சென்றுள்ளது இப்பிரச்னை. இதன்மூலம் உலகின் முதல் செருப்பு மாலை போடப்பட்ட விமர்சகர் எனும் பாராட்டுக்கும் ஆளாகியிருக்கிறார் புளூ சட்டை மாறன் என புளூ சட்டை மாறனே ட்வீட் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது பிரச்சனைக்கு வருவோம்.. புளூ சட்டை மாறன் வைக்கும் விமர்சனத்தை இரண்டாக பிரிக்கலாம்..

1. தேவையே இல்லாமல் எதற்கு சிங்கிள் ஷாட் படம்
2. இது உலகின் முதல் Non linear சிங்கிள் ஷாட் படமே அல்ல

பார்த்திபன் மேல் புளூ சட்டை மாறன் வைக்கும் முதல் விமர்சனத்தை ஏற்கனவே நாம் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். தன்னுடைய ஒத்த செருப்பு படத்தின் போதும் இதுபோல் பல உணர்ச்சிமயமான சம்பவங்கள் செய்துள்ளார் பார்த்திபன். இரவின் நிழல் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டது போல், ஒத்த செருப்பு single நடிகரை மட்டும் வைத்து எடுக்கப்பட்டிருந்தது.

நிற்க, ஹாலிவுட்டில் டாம் ஹேங்கின் ‘Cast Away’ என்று ஒரு படம் இருக்கும். விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்த விமானத்தில் இருந்து சக் நோலன்ட்(டாம் ஹேங்க்) மட்டும் உயிருடன் தப்பித்துவிடுவார். அருகில் இருக்கும் தீவில் தஞ்சமடையும் சக், அங்கிருந்து வெளியேற வழியின்றி அதே தீவில் தனியாளாக ஆண்டுக்கணக்கில் ‘சர்வைவ்’ செய்வதுதான் படத்தின் கதைக்கரு. உண்மையில் இந்த படத்தை அந்த ஒரு கதாப்பாத்திரத்தைக் கொண்டு மட்டுமே எடுத்திருக்கலாம். ஆனால் இயக்குநர் அதை விரும்பியிருக்கமாட்டார். தீவில் கதாநாயகனின் ‘சர்வைவலோடு’ மட்டும் படத்தை சுருக்காமல், விபத்துக்குள்ளாவதற்கு முன்பு ‘சக்’ என்பவன் யார், அந்த தீவிலிருந்து தப்பித்த பின்பும் குடும்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவன் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? போன்ற பல எமோஷன் காட்சிகளைக்கொண்டு அப்படத்தை அடுத்த தளத்திற்கு தூக்கிவிட்டு ‘கல்ட்’ ஆக்கியிருப்பார்.


இப்போது ஒத்த செருப்புக்கு வருவோம், ஒரே கேரக்டரை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றால், உண்மையில் அந்த கதைக்கு ஒரே கேரக்டர் தான் தேவைப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒத்த செருப்பில் பல கேரக்டர்கள் வந்த போதிலும், கேமராவை பார்த்திபன் முன்பு மட்டும் வைத்து விட்டு, இது ஒரே கேரக்டரைக்கொண்டு எடுக்கப்பட்ட உலகப்படம் என்று பரப்புரை செய்யப்பட்டது. படத்தில் அத்தனை கேரக்டர்கள் இருந்தும் ஆடியன்ஸ் ஏன் பார்த்திபனை மட்டும் திரையில் பார்க்கும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும், போன்ற பல கேள்விகள் அப்போது எழுந்தன. அதேபோலானதொரு விமர்சனத்தை தான் இரவின் நிழல் படத்திற்கு வைக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

https://twitter.com/tamiltalkies/status/1549193631189565440

இரண்டாவதாக ப்ளூசட்டை மாறன் வைப்பது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் ஏற்கனவே வந்துவிட்டது இது முதல் முயற்சியே அல்ல என்பதுதான். fish and cat திரைப்படம் Non linear முறையில் எடுக்கப்பட்டது என அமெரிக்கவின் புகழ்பெற்ற இதழான ‘variety’ எழுதியுள்ள விமர்சனத்தையும் ஆதாரமாக காட்டுகிறார் ப்ளூ சட்டை மாறன். அந்த விமர்சனத்திற்கான விளக்கத்தையோ அல்லது பதில் விமர்சனத்தையும் தாராளமாக பார்த்திபன் தரப்பு முன்வைக்கலாம் எனவும் மாறாக விமர்சனமே கூடாது மீறினால் செருப்பு மாலை போடுவோம் என்பது என்ன வகையான அணுகுமுறை எனவும் கேள்வி எழுப்பப்படுகிறது. இயக்குநர் பார்த்திபன் தன் ரசிகர்களை அவ்வாறான காரியங்களில் ஈடுபடாதவாறு கண்டிப்பதும், விமர்சனத்தை ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்வதுமே படைப்புக்கும் படைப்பாளிகளுக்கும் அழகு என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.

https://twitter.com/tamiltalkies/status/1549255197574467584

இத்தாலியை சேர்ந்த ஓவியர் ஒரு காலி கண்ணாடி பெட்டியை வைத்து அதில் கண்ணுக்கே தெரியாத ஓவியம் இருப்பதாகக் கூறி 13 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விட்ட சம்பவத்தை நீங்கள் படித்திருக்கக்கூடும். எதுவுமே இல்லாததைக்கொண்டு இந்த ஓவியம் உருவாக்கப்பட்டதாக அதன் வடிவமைப்பாளர் குறிப்பிட்டிருந்தார். விமர்சனங்களே இல்லை என்றால் அதேபோல யாருமே இயக்காத, யாருமே நடிக்காத, ஒரு Invisible Movie-ஐ எடுக்கும் முயற்சியில் கூட பார்த்திபன் இறங்கக்கூடும். திரையில் ‘புகை பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும், உயிரை கொள்ளும்’ எனும் கார்டு முடிந்தவுடன் அடுத்த 3 மணி நேரம்( பார்த்திபன் மனது வைத்தால் 2 மணி நேரம்) வெள்ளை திரையில் எதுவுமற்ற அந்த Invisible Movie-ஐ காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைக்கப்பெறும் என்றும் சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

  • வேல் பிரசாந்த்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.