அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் என 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நிரந்தர ஆசிரியர்கள் செய்யும் பணியை பகுதிநேர ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக செய்து வந்தாலும், அவர்களுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதால் அவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான நிலையில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்தோ அவர்களுக்கு இதர சலுகைகள் வழங்குவது குறித்தோ அரசு நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவும் அவர்களுடைய இதர கோரிக்கைகளை நிறைவேற்றவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.







