மணிப்பூர் வீடியோ விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், இன்று தொடங்கி, அடுத்த மாதம் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக மத்திய அரசு சார்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் தம்பிதுரை, ஓ.பி.ரவீந்திரநாத், மதிமுக சார்பில் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், இன்று காலை தொடங்கியது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத் தொடரில், தனிநபா் தரவுப் பாதுகாப்பு மசோதா, வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா, டெல்லி அவசரச் சட்டம் தொடா்பான மசோதா உள்பட 32 மசோதாக்கள் தாக்கலாகவுள்ளன. முதல் நாளான கூட்டம் தொடங்குவதற்கு முன்பே மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்கக் கோரி பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆளுநரை திரும்பப் பெறக் கோரி திமுகவும், டெல்லி அவசரச் சட்ட மசோதாவுக்கு எதிராக ஆம் ஆத்மியும் நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரின் தொடங்கிய முதல் நாளே இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களவை மதியம் 2 மணி வரையும், மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு மாநிலங்களவை கூடியதும் மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிக கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்ட நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், நாடாளுமன்றம் ஆரம்பித்த முதல் நாளே ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா







