லோகேஷ் கனகராஜின் கனவுத்திரைப்படம் என்று கூறப்பட்ட இரும்பு கை மாயாவி குறித்து இந்த கொகுப்பு விரிவாக விவரிக்கிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
‘லியோ’ படம் தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது. இதற்கு முன் லோகேஷ் இயக்கிய கைதி, விக்ரம் ஆகிய திரைப்படங்களின் கதை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக அமைந்திருந்தது. ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் சினிமேட்டிக் யூனிவர்ஸ் கதைகளைப் போல் இதனை ரசிகர்கள் ‘எல்.சி.யூ.’ என்று அழைத்து வருகின்றனர். தற்போது விஜய் நடிக்கும் ‘லியோ’ படமும் இந்த ‘எல்.சி.யூ.’ வில் வருமா என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களோடு கலந்துரையாடினார். அப்போது லோகேஷ் கனகராஜின் கனவுத்திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பிய போது, ”எனது கனவுத்திரைப்படமாக இரும்பு கை மாயாவி திரைப்படம் அமையும். நான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த கதையை எழுதி கொண்டு வருகிறேன்; நிச்சயமாக இது படமாகும் ” என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் இரும்பு கை மாயாவி திரைப்படத்தை சூர்யாவை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை நடிகர் சதிஷ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இரும்பு கை மாயாவி என்னும் கதாபாத்திரமானது 90களின் பிற்பகுதியில் பிரபலமாக இருந்த ஒன்று. இந்த கதை இன்றும் 90கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்ல் ஒன்று .
இந்திரஜால் காமிக்ஸ், ஃபால்கன் காமிக்ஸ், அமர் சித்திர கதா எனத் தமிழில் காமிக்ஸ் இதழ்கள் 1960-களிலேயே ரெகுலராக வரத் தொடங்கிவிட்டாலும், 1972-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளியான `இரும்புக் கை மாயாவி’தான் தமிழ் காமிக்ஸ் உலகுக்கு ஓர் அடையாளத்தை உருவாக்கியது. இங்கிலாந்தில் `The Steel Claw’ என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த காமிக்ஸ் தொடர், தமிழகத்தில் பெற்ற வரவேற்பு கொஞ்சநஞ்சமல்ல. சொல்லப் போனால், இங்கிலாந்தில்கூட இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
ஒரு காலகட்டத்தில் இரும்புக் கை மாயாவியின் பெயர் அட்டையில் இருந்தாலே புத்தகம் விற்றுத் தீர்ந்துவிடும். எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கடைகளில் இரும்புக் கை மாயாவியைப் போலவே `தங்கக் கை மாயாவி’, `இரும்பு விரல் மாயாவி’, `தங்க விரல் மாயாவி’, `உலோகக் கை மாயாவி’, `நெருப்பு விரல் சி ஐ டி’ என ஏகப்பட்ட இமிட்டேஷன்கள் ஜொலித்தன. இந்த உள்ளூர் மாயாவிகளின் கதைப் புத்தகங்கள்கூட பத்தாயிரம் பிரதிகள் விற்பனை என்ற இலக்கை சர்வசாதாரணமாகத் தொட்டன. இதற்கெல்லாம் `இரும்புக் கை மாயாவி’தான் முக்கியமான காரணம்.
பிரபல விஞ்ஞானி பாரிங்கரிடம் உதவியாளராகப் பணிபுரிபவர்தான் ஒரு விபத்தில் தனது வலது கையை இழந்த லூயிஸ் கிராண்டேல். எஃகினால் செய்யப்பட்ட ஓர் உலோகக் கை, இவரது மணிக்கட்டில் பொருத்தப்பட்டது. பாரிங்கர் ஒரு பரிசோதனையை மேற்கொண்டபோது உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து, அவரது பரிசோதனைக்கூடமே விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் கிராண்டேல் மீது அந்த உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து யாருமே எதிர்பார்க்காத ஒரு புதிய விளைவை உண்டாக்கிவிடுகிறது.
மின்சாரம் பாய்ந்ததில் கிராண்டேலின் முழு உடலும் மாயமாக, அவரது உலோகக் கை மட்டும் கண்ணுக்குத் தெரிகிறது. இந்த மாயமாக மறையும்தன்மை பாய்ச்சப்பட்ட மின்சாரத்தின் அளவைப் பொறுத்து, சில நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை நீடிக்கும்.
மாயாவியின் இரும்புக் கையில் ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு புதிய விசேஷ சக்தி கூடிக்கொண்டே வந்தது. முதலில் மாயமாக மறைவதற்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட இரும்புக் கை, பிறகு ஒரு மின் கடத்தியாகச் செயல்பட்டது. அதன் பிறகு, அந்தக் கரத்தின் மூலம் மின்சாரத்தைப் பாய்ச்சும் வசதி, ஆள்காட்டி விரலில் இருந்த மினி துப்பாக்கி, நடுவிரலிலிருந்து வெளிவரும் மயக்க வாயு, உள்ளங்கையில் இருக்கும் மினி ரேடியோ என்று ஒரு ஜேம்ஸ்பாண்ட் வகையான உளவாளியானார் மாயாவி.
இந்த விபத்தினால் மனக்குழப்பம் அடைந்த கிராண்டேல், தனக்குக் கிடைத்துள்ள சக்தியின் மதிப்பை உணராமல், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகிறார். பிறகு தெளிவுபெற்று, பிரிட்டிஷ் உளவுத் துறையில் சேர்ந்து மிகச்சிறந்த உளவாளியாகிறான். ஒவ்வொரு முறை மின்சாரத்தைத் தொடும்போதும் மாயாவியின் உடல் மாயமாக மறைந்துவிடும்; இப்படித்தான் இரும்புக் கை மாயாவி உருவானார்.
வேலியன்ட் என்பது, நம்ம ஊர் ‛சிறுவர் மலர்’ போன்ற ஒரு இணைப்பு இதழ். இதில் இரண்டு பக்க காமிக்ஸ் தொடர்கதையாக வெளியானது இந்த காமிக்ஸ் தொடர். இதற்கிடையில் இன்னும் அதிக அளவில் நாவல்கள் எழுதவேண்டி ஏகப்பட்ட கோரிக்கைகள் முன்வர, இரும்புக் கை மாயாவியின் முதல் மூன்று கதைகளை மட்டும் எழுதிய நிலையில் கென்பல்மர் இந்தக் கதை வரிசையை, காமிக்ஸ் உலகைவிட்டு விலகினார். அதற்கு அடுத்த கதைகளை எல்லாம் டாம் டுல்லி எழுதி `இரும்புக் கை மாயாவி’ என்ற ஒரு சகாப்தத்தைத் தொடர்ந்தார்.
தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக் கை மாயாவியின் சகாப்தம் தொடர்கிறது. சமகால இயக்குநர்களான பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர்.முருகதாஸ், சிம்புதேவன், பொன்வண்ணன் போன்றோர் தங்களது சிறுவயது இன்ஸ்பிரேஷனாக இரும்புக் கை மாயாவியையே குறிப்பிடுகின்றனர்.
பல நடிகர்கள், இந்தக் கதையைத் திரைப்படமாக எடுக்க விரும்பினர். முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தமிழின் முதல் முப்பரிமாணத் தொலைக்காட்சித் தொடர் ஆரம்பித்த போது, அதன் கதை இரும்புக் கை மாயாவியைத் தழுவியே இருந்தது.
நமது கலாசாரம் சார்ந்த கதை சொல்லவேண்டிய தமிழ் காமிக்ஸ் உலகின் போக்கையே மாற்றி, மொழிமாற்று காமிக்ஸ்களுக்கு முக்கிய இடம் அமைக்க இவர்தான் காரணம். இதனாலேயே, ஒரு காலகட்டத்தில் ஒரிஜினல் தமிழ் காமிக்ஸ் படைப்புகள் உருவான போக்கு மாறி, மொழிபெயர்ப்புகளுக்கு வழிசெய்தவர் என விமர்சிப்பவர்களும் உண்டு.








