சென்னை மாநகராட்சியில் பூங்காக்கள் பராமரிக்கப்படுவதில்லை: மாமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவை ஒப்பந்ததாரர்கள் முறையாக பராமரிப்பதில்லை என மாமன்ற உறுப்பினர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்தனர். சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர்…

சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவை ஒப்பந்ததாரர்கள் முறையாக பராமரிப்பதில்லை என மாமன்ற உறுப்பினர்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டு வைத்தனர்.

சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் கூடியது.இதில், கணக்கு குழுத் தலைவர் தனசேகரன் பேசுகையில், சென்னையில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் 142 பூங்காக்கள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 57 பூங்காக்கள் தனியாருக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 584 பூங்காக்கள் மண்டலங்களில் டெண்டர் விடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை நம் முதலமைச்சர் மேயராக இருந்தபோது உருவாக்கப்பட்ட பூங்காக்கள் ஆகும்.

காழ்புணர்ச்சியின் காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பூங்காக்கள்
திட்டமிட்டு சீரழிக்கப்பட்டு இருக்கிறது என தணிக்கை ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதற்கான காரணங்களை ஆய்வு செய்ததில், மண்டல அளவில் பூங்கா பராமரிப்பு டெண்டர் விடப்பட்டாலும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கே சென்னை முழுவதும் உள்ள பூங்காக்கள் பராமரிப்பு டெண்டர் கொடுக்கப்பட்டு வந்திருப்பது தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஒரே நபர் வெவ்வேறு நிறுவனங்களின் பெயர்களிலும் டெண்டர்
எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் அதிகாரிகள் முறையாக டெண்டர் தொகையினை கணக்கிடாமல் டெண்டர் விட்டதாலும், ஒப்பந்ததாரர்களுக்கு போதிய நிதி வழங்கத்தாததாலும் அவர்களால் தொடர்ந்து பூங்காக்களை பராமரிக்க முடிவதில்லை என ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், அதிகாரிகளும் பூங்கா பராமரிப்பு குறித்தான ஆய்வு ஆவணங்களை முறையாக பராமரிப்பது இல்லை என தெரியவந்துள்ளது. இம்மாத இறுதியில் கிட்டத்தட்ட அனைத்து பூங்காக்களின் பராமரிப்பு ஒப்பந்தமும் நிறைவடைகிறது. அதனால் சென்னை மாநகராட்சி ஆணையர் கடந்த காலங்களில் பூங்காக்களை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரர்களை புதிய டெண்டரில் பங்கேற்க தடைவிதிக்க வேண்டும். மேலும் டெண்டர் தொகையை முறையாக கணக்கிட்டு நிர்ணயிக்கவும், பூங்காக்களின் பாராமரிப்பை தினமும் ஆய்வு செய்ய மண்டல அதிகாரிகளுக்கு வழிகாட்டிட வேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வார்டு குழு தலைவர் ரவிச்சந்திரன்,  NUML தொழிலாளர்களை வைத்து பூங்காவை பராமரிக்கலாம். ஆன்லைன் மூலம் ஒப்பந்தம் வழங்கக் கூடாது. ஏனென்றால் யார் ஒப்பந்தம் எடுக்கிறார்கள் என்ற தகவல் கூட எங்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் பூங்காவை சரியாக பராமரிக்கவில்லை என்றால்
வந்து ஒப்பந்ததாரரை கேட்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், பூங்காவை
பராமரிப்பதற்காக தொழிலாளர்களுக்கு போதிய ஏற்பாடுகளும் ஒப்பந்ததாரர்கள்
செய்வதில்லை. எனவே, தற்போது பூங்கா விஷயத்தில் பெரிய தவறு நடந்து
கொண்டிருக்கிறது. எனவே, பூங்காவை ஒப்பந்தம் வழங்காமல் மாநகராட்சி ஊழியர்களை வைத்து பராமரிக்க வேண்டும் ” என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஆணையர், ” கடந்த ஆண்டு ஒப்பந்தம் முடியும் நிலையில் உள்ளது. 2023-2024 ஆண்டுக்கான பூங்கா பராமரிப்பு பணி எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து மேயர் , துணை மேயர் அதிகாரிகள் உடன் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.