திருவாரூர் அருகே கடன் பிரச்னை காரணமாக ஊராட்சி மன்ற தலைவர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசலை அடுத்துள்ள நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் உள்ளாட்சி தேர்தலில் நெடுஞ்சேரி ஊராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில், நெடுஞ்சேரி பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் முருகானந்தம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பொதுமக்கள் அவரை மீட்டு குடவாசல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், முருகானந்தம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கடன் பிரச்சினை காரணமாக முருகானந்தம் உயிரை மாய்த்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தேர்தல் செலவுக்காக, முருகானந்தம் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பிக்கொடுக்க முடியாமல் அவர் தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், அவரது உயிரிழப்பு க்கு வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




