சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை செய்யப்பட்டதில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடாரின் வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, தென்காசி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழனிநாடார், அதிமுக சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் உள்பட 18 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில், அதிமுக வேட்பாளரான செல்வமோகன்தாஸ் பாண்டியனை எதிர்த்துப் போட்டியிட்ட பழனிநாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில்,பழனி நாடார் வெற்றி முறைகேடானது எனக் கூறி, அதிமுக வேட்பாளரான செல்வம் மோகன்தாஸ் பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில், இன்று காலை சுமார் 10 மணி முதல் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து தென்காசி சட்டமன்ற தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணியானது நடைபெற்று வந்தது.
இந்த வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வாக்கு எண்ணும் பணியானது அவ்வப்போது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சுமார் 3 மணிக்கு பிறகு வாக்கு எண்ணும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், தற்போது தபால் வாக்குகளின் காங்கிரஸ் வேட்பாளரான பழனி நாடார் 1606 வாக்குகளும், அதிமுக வேட்பாளரான செல்வ மோகன் தாஸ் பாண்டியன் 673 வாக்குகளும் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தற்போது சுமார் 368 வாக்குகள் வித்தியாசத்தில் பழனி நாடார் வெற்றியானது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் பெற்ற மொத்த வாக்குகள் 89,312 , அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பெற்ற மொத்த வாக்குகள் 88,944. இதன்படி 368 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.