குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரைமணி நேரமாக அலறவிட்ட குட்டி யானையால் மலைப்பாதையில் பரபரப்பு ஏற்பட்டது.
குன்னூர் மேட்டுப்பாளையம் மலைபாதையில் உள்ள வனப்பகுதியில் பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதால் கடந்த சில நாட்களாக காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. மேலும் மலைப்பாதையில் அவ்வப்போது திடீரென யானைகள் உலா வருகின்றன. இந்த நிலையில் மலைப்பாதையில் உலாவரும் யானைகளை விரட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் பணியில் நாள்தோறும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மலைப்பாதையில் இச்சிமரம் பகுதியில் சாலையோரம் குட்டியுடன் ஒரு யானை உலா வந்தது. நீண்ட நேரமாக சாலையோரத்தில் மேய்ச்சலில் யானைகள் ஈடுபட்டிருந்தன. அப்போது குட்டியானை சாலையில் திடீரென உலா வந்தது. உடனே வேட்டை தடுப்பு காவலர்கள் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி யானைகளை விரட்ட கூச்சலிட்டனர். இதில் ஆக்ரோஷமடைந்த குட்டி யானை சாலையின் நடுவே உலா வந்து வனத்துறையினரை விரட்டியது.
பின்பு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லும்பொழுது கொண்டை ஊசி வலையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை சேதப்படுத்தியது. அந்த குட்டி யானை தாய் யானையை காணாமல் அதை அழைக்கும் ஆக்ரோஷத்துடன் பிளிறியது. பின்பு வனப்பகுதிக்குள் சென்றது. குட்டியானை சாலையில் உலா வந்ததால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இரு புறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் மலைப்பாதையில் பரபரப்பு ஏற்பட்டது.







