பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ள நிலையில், ஐரோப்பா நாடாளுமன்றம் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மாதத்திலிருந்தே பெரும் கலவரம் நடந்துவருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவித்தனர். இதுவே, இரு சமூகத்தினரின் மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
கடந்த 2 மாதங்களாக நீடித்து வரும் இந்த கலவரத்தில் 142 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாகவும், 5 ஆயிரம் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு 350 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் காவல்துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமான மூலம் பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை நேரில் சந்திக்க உள்ளார் என கூறப்பட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றம் சார்பில் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:
“மணிப்பூரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. பலர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறையில் பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு சிறுபான்மையினர், அவர்களது உரிமைகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
அங்கு நடைபெறும் வன்முறை இன ரீதியாகவும், மத ரீதியாகவும் நடைபெறுகிறது. முக்கியமாக ஹிந்துக்கள் அதிகமுள்ள மைதேயி இனத்தினருக்கும், கிறிஸ்தவத்தை பின்பற்றும் குகி இன மக்களுக்கும் இடையே இந்த வன்முறை நீடித்து வருகிறது. இந்த வன்முறையால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுச் சொத்துகள் மற்றும் வழிபாட்டுத் தளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய விதத்தில் உள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டம் மாநிலத்தில் இருந்து திரும்ப பெறப்பட வேண்டும். அந்த மாநிலத்தில் இணைய சேவையினை மீண்டும் தொடங்க வேண்டும்” இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.




