பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தான் நடிகரின் படத்திற்கு தடை – மத்திய அரசு நடவடிக்கை!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தான் நடிகரின் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து பிரதமர் மோடி இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் மீது அதிரடியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.

அந்த வகையில் பாகிஸ்தானில் இருந்து SVES விசாக்களின் கீழ் இந்தியா வருவோருக்கு அனுமதி இல்லை என்றும் அந்த விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

மேலும்  அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படவும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் பாகிஸ்தான் உடனான சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே 1ஆம் தேதிக்குள் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து எல்லைகளில் பாகிஸ்தானியர் கொத்து கொத்தாக இந்தியாவை வெளியேற ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் ஃபவாத் கானின் பாலிவுட் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதன்படி அவரது நடிப்பில் வருகிற மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அபிர் குலால்’ படத்திற்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. விவேக் பி அகர்வால் என்பவர் தயாரித்துள்ள இப்படத்தில் ஃபவாத் கானுக்கு ஜோடியாக வாணி கபூர் நடித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.