பாகிஸ்தானின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் கழுதைகள்

பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு கை கொடுக்கும் முக்கிய உயிரினமாக கழுதை இருக்கும் நிலையில், அவற்றின் எண்ணிக்கை கடந்த நிதி ஆண்டில் 57 லட்சமாக உயர்ந்துள்ளது. கழுதைகளின் எண்ணிக்கையில் உலகின் 3வது பெரிய நாடு பாகிஸ்தான். இங்கு,…

பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு கை கொடுக்கும் முக்கிய உயிரினமாக கழுதை இருக்கும் நிலையில், அவற்றின் எண்ணிக்கை கடந்த நிதி ஆண்டில் 57 லட்சமாக உயர்ந்துள்ளது.

கழுதைகளின் எண்ணிக்கையில் உலகின் 3வது பெரிய நாடு பாகிஸ்தான். இங்கு, கடந்த 2019-20 நிதி ஆண்டில் 55 லட்சமாக இருந்த கழுதைகளின் எண்ணிக்கை, 2020-21 நிதி ஆண்டில் 56 லட்சமாக இருந்தது. இதுவே, 2021-22 நிதி ஆண்டில் 57 லட்சமாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் கிராமப்புறங்களில் 80 லட்சம் குடும்பங்கள் கால்நடைகளை வளர்க்கும் தொழிலை மேற்கொண்டு வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

கழுதைகள் மட்டுமின்றி, ஆடுகள், செம்மறி ஆடுகள், எருமை மாடுகள் ஆகியவற்றின் எண்ணிக்கையும் பாகிஸ்தானில் தொடர்ந்து உயர்ந்து வருவதாகக் கூறும் பாகிஸ்தான் அரசு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஏழ்மையைப் போக்கவும் கால்நடைகள் முக்கிய பங்கு வகித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

கால்நடைகள் ஏற்றுமதி மூலம் 2020-21 நிதி ஆண்டில் ரூ.526.90 கோடியை ஈட்டிய பாகிஸ்தான், 2021-22 நிதி ஆண்டில் ரூ.544.10 கோடியை ஈட்டியுள்ளது.

கழுதைகள் பாகிஸ்தானில் இருந்து அதிக அளவில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதற்காகவே, பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களில் அதிக அளவில் கழுதைப் பண்ணைகள் இயங்கி வருகின்றன.

உலகில் கழுதைகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் சீனா, பாகிஸ்தானிடம் இருந்தும் அதிக அளவில் கழுதைகளை இறக்குமதி செய்கிறது.

கழுதைகளைக் கொண்டு எஜியோ எனும் மருந்துப் பொருளை சீனா தயாரிப்பதாகவும், இது ரத்த ஒட்டம் சீராக இருக்கவும், ரத்த சோகையை போக்கவும் இந்த மருந்து உதவுவதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது மருத்துவ ரீதியில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

எல்லா காலங்களிலும் நட்புடன் திகழ்ந்து வரும் பாகிஸ்தான் – சீன உறவுக்கு கழுதைகளும் முக்கிய பாலமாக இருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.