எனக்கு அபராதமா? – காவல்துறையினரிடம் செல்போனை பறித்த இளைஞர்

மதுரையில் தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞரின் வாகனத்தை தடுத்து வீடியோ பதிவு செய்த காவல்துறையினரிடம் செல்போனை பறித்துசென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.   மதுரை தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சாலையில் நேற்று மாலைஆல்வின் ஜெபாஸ்டின்,…

மதுரையில் தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞரின் வாகனத்தை தடுத்து வீடியோ பதிவு செய்த காவல்துறையினரிடம் செல்போனை பறித்துசென்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

 

மதுரை தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சாலையில் நேற்று மாலைஆல்வின் ஜெபாஸ்டின், சின்ன கருத்தபாண்டி ஆகிய இரு காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி தலைக்கவசம் அணியவில்லை என்பதால் அபராதம் விதிப்பதாக கூறியுள்ளனர். அதற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ள தனது வாகனத்தை எப்படி நிறுத்தலாம் என கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

இதனையடுத்து, பணியில் இருந்த காவலர் ஆல்வின் ஜெபாஸ்டின் இளைஞரின் செயலை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை பார்த்த இளைஞர் காவலரின் செல்போனை தட்டிவிட்டதோடு, செல்போனை பறித்துசென்றுள்ளார்.
பின்னர் இளைஞரை விரட்டிபிடித்த மற்றொரு காவலரான சின்ன கருத்தபாண்டி இளைஞரிடம் இருந்து செல்போனை திரும்ப பெற்றார். மேலும் இளைஞர் மீது தல்லாகுளம் காவல்நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.


புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளைஞர் மதுரை யானைக்கல் பகுதியை சேர்ந்த வசந்த் என்பது தெரியவந்தது. மேலும் காவலர்களிடம் இருந்து செல்போனை பறித்து சென்றதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இளைஞரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

 

இதனிடையே, வசந்த் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, செல்போனை பறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.