மீண்டும் காதல் படத்தில் களமிறங்கியிருக்கிறார் பா.ரஞ்சித். அவர் இயக்கத்தில் வெளியாகவுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காதலின் பல கோணங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படமானது முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பா.ரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தியில் காதலின் வித்தியாசமான கோணத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். தமிழ் சினிமாவில் காட்டப்படும் காதல் கதைகளில் இருந்து வித்தியாசமாக மிகவும் எதார்த்தமாக காதலை கையாண்ட விதம் தான் பா.ரஞ்சித்தை தனித்து காட்டியது.
அட்டகத்திக்கு பிறகு ஒரு முழு நீள காதல் கதையை ரஞ்சித் கையில் எடுத்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ட்ரைலர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கட்டாயத் திருமணங்கள், திருமணங்களில் உள்ள சிக்கல்கள், தன்பால் ஈர்ப்பாளர்களுக்கிடையேயான காதல், திருநங்கைக்கும் ஆணுக்குமான காதல் என ஆழமான பல விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்தின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கிறது.
படத்தின் போஸ்டரே, தன் பாலின ஈர்ப்பாளர்களின் அடையாள கொடியின் வண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. காதலை சுற்றி நடக்கும் சிக்கல்களையும், சாதி மத பிரிவினையை பற்றியும் படம் பேசுவதை உணர்த்தும் வகையில் ட்ரைலரின் காட்சிகள் அமைந்துள்ளது. அட்டகத்தி மூலம் காதல் குறித்த கற்பிதங்களை தகர்த்த பா.ரஞ்சித் இப்படத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.







