இருளில் மூழ்கிய அண்டார்டிகா – ‘Long Night’ ஆரம்பம்

அண்டார்டிகாவில் சூரிய உதயம் இல்லாமல் நீண்ட இரவு ஆரம்பமானது. இதனை ஆராய்ச்சியாளர் உறுதிப்படுத்தினர். கடந்த மே 13 அன்று இறுதி சூரிய அஸ்தமனத்துடன், ‘ Long Night ‘ எனப்படும் நீண்ட இரவு காலகட்டத்திற்குள்…

அண்டார்டிகாவில் சூரிய உதயம் இல்லாமல் நீண்ட இரவு ஆரம்பமானது. இதனை ஆராய்ச்சியாளர் உறுதிப்படுத்தினர்.

கடந்த மே 13 அன்று இறுதி சூரிய அஸ்தமனத்துடன், ‘ Long Night ‘ எனப்படும் நீண்ட இரவு காலகட்டத்திற்குள் அண்டார்டிகா நுழைந்து விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். உலகின் பிற இடங்களில் 4 பருவக் காலங்கள் நிகழ்வதே இயற்கையின் அதிசயம். ஆனால், அண்டார்டிகாவில் மட்டும் கோடைக்காலமும், குளிர்காலமும் மட்டுமே இருக்கும்.

பூமியின் மிகவும் குளிரான பகுதியான இங்கு, வருடத்தின் 6 மாதங்கள் சூரிய ஒளியிலும், எஞ்சியுள்ள 6 மாதங்கள் இருளிலும் மூழ்கும். இந்த நீண்ட இரவு காலத்தை, விண்வெளி வீரர்கள் நீண்ட விண்வெளிப் பயணங்களுக்குச் செல்வதற்கு முன், கடுமையான விண்வெளி சூழலை சமாளிப்பதற்காகப் பயிற்சி எடுக்க பயன்படுத்திக் கொள்கின்றனர்.

அண்டார்டிகாவில் உள்ள கான்கார்டியா என்ற பகுதியில், பூமியின் தொலைதூரத் தளத்தை இயக்கும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் (ESA) 12 உறுப்பினர்களைக் கொண்ட குழு அங்கு பயிற்சி எடுத்து வருகிறது. கடுமையான நிலைமைகள் மனிதர்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள பல்வேறு சோதனைகளை மேற்கொள்வதே இந்தக் குழுவின் பணியாகும்.

அத்துடன், “தூக்க ஆய்வுகள் முதல் குடல் ஆரோக்கிய அளவீடுகள், விண்வெளி போன்ற தீவிர சூழல்கள், தற்போதைய மற்றும் எதிர்கால ஆய்வாளர்களுக்கு ஏற்படும் சவால்களை ஆராய்ச்சியாளர்கள் எவ்வாறு புரிந்துகொண்டு சமாளிப்பது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள, இந்த குழுவினர் தூண்டப்பட்டு ஊக்கப்படுத்தப்படுகிறார்கள்” என்று ESA தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் குளிர்காலப் பயிற்சியாக இந்த ஆண்டும் அண்டார்டிகாவில் ESA வின் 12 உறுப்பினர்களை கொண்ட குழு பயிற்சி எடுத்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

– சத்யா விஸ்வநாதன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.