சொத்துக்காக மகனே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகப் பாதுகாப்பு கேட்டுப் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சிறுவை கிராமத்தில் வசித்து வருகின்றனர் வயதான தம்பதி தம்புசாமி – தனகோடி. இவர்களுக்கு தமிழரசன், மோகன்தாஸ் ஆகிய மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தமிழரசன் சென்னையில் வசிப்பதால், 2வது மகனான மோகன்தாசுடன் வயதான தம்பதி வசித்து வந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளாகப் பெற்றோரை சரியாக கவனிக்காமல் இருந்த மோகஸ்தாஸ், தினமும் மது அருந்தி வந்து நிலத்தைத் தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு பெற்றோரை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் இரவு இட்லி மாவில் பூச்சி மருந்தினை கலந்துள்ளார். இரவு சமைப்பதற்காக இட்லி மாவினை எடுத்தபோது நீல நிறமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் தனகோடி, தனது கணவருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மேலும், சொத்துக்காக மகனே கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும், பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கப் புகார் மனு அளித்தனர்.







