திறன் இந்தியா திட்டத்தின் மூலம் 1.25 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திறன் இந்தியா திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சர்வதேச இளைஞர் திறன் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டும், திறன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதன் ஐந்தாம் ஆண்டு தினத்தை ஒட்டியும் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, அடுத்த தலைமுறை இளைஞர்களின் திறன் மேம்பாடு தேசிய தேவை என்றும் சுயசார்பு இந்தியாவுக்கு அது அடித்தளம் என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா காலகட்டத்துக்கு இடையே இந்த தினத்தை இரண்டாவது முறையாக அனுசரிக்கிறோம் என்ற பிரதமர், இந்த உலகளாவிய தொற்றுநோயின் சவால்கள், சர்வதேச இளைஞர் திறன் தினத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்திய அரசின் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் மூலம் இதுவரை 1.25 கோடிக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.







