ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படும் படங்களை திரையிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா பொருந்தொற்று 2020 மார்ச் மாத தொடக்கத்தில் இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியது. இதைக்கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகள் மூடப்பட்டதால், வெளியீட்டிற்கு தயாரான அனைத்து படங்களும் முடங்கின. இதனால், பெரும் பாதிப்பை சந்தித்த திரையுலகம், சூரரை போற்று, மூக்குத்தி அம்மன், க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியிட்டது. இவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அத்துடன் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல லாபத்தை பெற்று தந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மீண்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான தலைவி திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம், இரண்டு வார இடைவெளியில் ஓடிடி தளத்திலும் படத்தை வெளியிட ஆயத்தமானது. இதனையடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்கில் வெளியிடும் படங்களை 4 வார இடைவெளிக்கு பிறகே ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவோம் என சான்றளிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். இந்த நிபந்தனையை ஏற்றுக்கொள்ளாத தயாரிப்பாளர்களின் திரைப்படங்கள் மற்றும் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளிடப்படும் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை எனவும் திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளன்ர்.