தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் இறால்
பண்ணைகளை அகற்ற தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் சட்ட விரோதமாக இயங்கும் இறால்
பண்ணைகளால் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியானதை அடுத்து, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்ய கோபால் அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக இறால் பண்ணைகள், கடலோர ஒழுங்கு ஆணையத்தின் விதிகளை பின்பற்றி இயங்குகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கடலோர மீன்வளர்ப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்குள் இயங்கும் இறால் பண்ணைகள், கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறுவதோடு, கடலோர மீன் வளர்ப்பு ஆணையத்திடமும் அனுமதி பெற வேண்டுமென தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடலோரத்திலிருந்து 200 மீட்டருக்குள் இறால் பண்ணைகள் அமைக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதால், விதிகளை மீறி இயங்கும் இறால் பண்ணைகளை அப்புறப்படுத்த
கடலோர மீன் வளர்ப்பு ஆணையத்திற்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுவரை சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளுக்கு அபராதம் விதிக்க வேண்டுமெனவும், சட்ட விதிகளுக்குட்பட்டு செயல்படும் இறால் பண்ணைகள் தொடர்ந்து செயல்பட தடை எதுவும் இல்லை எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.







