சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படாததால் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வமும் சட்டப்பேரவையில் இன்று அருகருகே அமர்ந்திருந்தனர்.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையுடன் இன்று தொடங்கியது. அதிமுக இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கடிதமும் சபாநாயகர் அப்பாவுவிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாத காரணத்தினால் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓ.பன்னீர்செல்வத்திற்கான இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையிலேயே ஓ.பன்னீர்செல்வமும் அமரவைக்கப்பட்டார். இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் இதல் நாளான இன்றும் அதே நிலையே நீடித்தது. இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியபோது, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர் இருக்கையிலும், ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையிலும் அமர்ந்திருந்தனர்.
அதிமுகவில் இருவரும் எதிரும் புதிருமாக இரு துருவங்களாக செயல்பட்டுவரும் நிலையில் சட்டப்பேரவையில் அவர்கள் அருகருகே அமர்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த காட்சி வைரலாகி அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை கடிதம் மூலமாகவும் நேரிலும் வலியுறுத்தியும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு சபாநாயகர் ஒதுக்காததால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் போது இந்த விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.







