சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர்கள் ஜி.மீனாட்சி மற்றும் ப.காளிமுத்துவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான பால புரஷ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டெல்லியில் சாகித்ய அகாடமியின் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொழி வாரியாக மூன்று நடுவர்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட நூல்களின் அடிப்படையில் விருதுகளுக்கான நூல்களும், எழுத்தாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பஞ்சாப் மொழியை தவிர்த்து, பிற மொழிகளில் நூல்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ் மொழிக்கான 2022ம் ஆண்டு சாகித்ய அகாடமி பால சாகித்யா புரஸ்கார் விருது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார விருது, ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதை தொகுப்புக்காக எழுத்தாளர் ப.காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வரும் நவம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது. அப்போரு விருது பெற்றவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும், விருதும் வழங்கப்படும்.
சாகித்ய அகாடமி பால புரஸ்கார் மற்றும் யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர்கள் ஜி.மீனாட்சி மற்றும் ப.காளிமுத்து ஆகியோருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், சாகித்ய அகாடமியினால் வழங்கப்படும் சிறு கதைகளுக்கான “பால சாகித்ய புரஸ்கார் விருது” இந்த ஆண்டு “மல்லிகாவின் வீடு” என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கும், இளம் தமிழ் எழுத்தாளர்களுக்கான “யுவ புரஸ்கார் விருது” எழுத்தாளர் ப.காளிமுத்துவின் “தனித்திருக்கும் அரளிகளின் மதியம்” என்ற கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் மேன்மேலும் பல்வேறு விருதுகளைப் பெற எனது நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.








