ஓபிஎஸ்- இபிஎஸ் நேரில் சந்திப்பா ?

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை விவகாரம் குறித்து நேரில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக மாவட்டச்…

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உடன் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை விவகாரம் குறித்து நேரில் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை என பேசினார். இவரை தொடர்ந்து பேசிய பெரும்பான்மையான நிர்வாகிகளும் ஒற்றைத்தலைமைக்கு ஆதரவாக பேசினர். ஒற்றை தலைமை யார் என்பது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன், தச்சை கணேஷ் ராஜா போன்றோர் ஒற்றை தலைமை என்ற விவாதம் தற்போதைக்கு தேவையில்லை என பேசியதாக தெரிகிறது. முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரு படி மேலேபோய் எடப்பாடி பழனிசாமிதான் ஒற்றை தலைமைக்கு பொருத்தமானவர் என பேசினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், ஒற்றை தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாகும். இதில் யார் தலைமை என்பதால் பின்னர் விவாதித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திய ஓபிஎஸ், கட்சியில் நலன் முக்கியம் என்பதால் எடப்பாடி பழனிசாமியுடன் திறந்த மனதுடன் விவாதிக்க தயாராகவுள்ளேன் எனக் கூறியிருந்தார்.

இந்தநிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் இன்று அதிமுக தலைமையகத்திற்கு சென்றுள்ளார். அவரைத்தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமியும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் இன்று இப்பிரச்சனை குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இப்பிரச்சனைக்கு இறுதி வடிவம் கிடைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

இராமானுஜம்.கி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.