சென்னை மெரினா கடலுக்குள் 134 அடி உயரத்திற்கு பேனா வடிவ சிற்பம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் உள்ள திருவள்ளுவர் சிலையைப் போல் தமிழ்நாட்டின் இன்னொரு அடையாளமாக அந்த பேனா சிற்பம் மாறும் எனக் கூறப்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்துசொல்லும், சென்னை மெரினா கடற்கரை தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. அங்கு ஏற்கனவே அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அங்கு தற்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பிரம்மாண்ட நினைவிடம் அமைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.உதயசூரியன் வடிவில் அமைய உள்ள கருணாநிதி நினைவிடத்தில், பிரம்மாண்டமான பேனா வடிவிலான தூணும் இடம்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்படும் இந்த நினைவிடத்தில், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவரின் அறிவுத்திறன், சிந்தனை உள்ளிட்டவற்றை வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் நவீன ஒளிப்படங்களும் அமைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையிலும், கருணாநிதியின் எழுத்தாற்றலை குறிக்கும் வகையிலும் மிக உயரமான பேனா வடிவ சிற்பத்தை அமைக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்திலிருந்து 360 மீட்டர் தொலைவில் கடலுக்குள் 80 கோடி ரூபாய் செலவில், 134 அடி உயரத்திற்கு பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி நினைவிடத்திலிருந்து பேனா சின்னத்தை காண்பதற்காக கண்ணாடி நடைபாலமும் அமைக்க வரைபடம் தயாராகியுள்ளது
நிலப்பகுதியிலும், கடல்பகுதியிலும் அமையும் கண்ணாடி நடைபாலத்தில் நடந்து கடலின் அழகை ரசித்தவாறே பேனா நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் திட்டங்கள் தயாராகி வருகின்றன. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் கடலுக்குள் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக இந்த சிலை விளங்குகிறது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்தாற்றலையும், இலக்கிய செழுமையையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் மெரினாவில் அவர் நினைவிடத்திற்கு பின்னால் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா நினைவு சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால், அதன் அனுமதியும் பெற வேண்டிய நிலை உள்ளது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் இத்திட்டத்திற்கான விண்ணப்பம் ஒன்றிய அரசின் நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்தவுடன் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டு கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட அனுமதிகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– விக்னேஷ்









