வீரகேரளம்புதூர் அருகே அச்சங்குட்டம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அங்சங்குட்டம் கிராமத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அரசு புறம்போக்கு நிலத்தில் தொடக்கப் பள்ளி கட்டப்பட்டு அதை CSI கிறிஸ்தவர்கள் நிர்வகித்து வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக அந்த பள்ளி கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது வேறு இடத்தில் பள்ளி கட்டப்பட்டுள்ளது.
முன்பு பள்ளி இருந்த இடம் தற்போது காலிமனையாக உள்ளது. இன்று காலை காலியாக உள்ள அந்த இடத்தில் தேவாலயம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை சிலர் தொடங்க இருந்த நிலையில் கிராம மக்கள் 100க்கு மேற்பட்டோர் திரண்டனர். இதனால் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது.
இந்த அரசு புறம்போக்கு நிலத்தில் கிராமமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேவாலயம் கட்டுவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.







