மாநிலங்களவையிலும் பிரதமர் நரேந்திர மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள், அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து வருகிறது. மாநிலங்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்காததை கண்டித்து எதிர்க்கட்சி எம்பி-க்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தொடர்ந்து பேசிய நிலையில், “எதிர்க்கட்சித் தலைவர்.. எதிர்க்கட்சித் தலைவர்” என்றும், “பொய் சொல்வதை நிறுத்துங்கள்” என்றும் எதிர்க்கட்சியினர் முழக்கமிடத் தொடங்கினர். இதனையடுத்து, பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பி-க்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.







