ஜிஎஸ்டி விதிமீறல்களுக்கு அமலாக்கத்துறை வழக்கா? தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு!

ஜிஎஸ்டி விதி மீறல்களுக்காக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சிறு வணிகர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறையை அனுமதிப்பது தொடர்பாக, ஜிஎஸ்டி கவுன்சில் விவாதத்திற்கு பிறகே முடிவெடுக்க வேண்டும் என தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட…

ஜிஎஸ்டி விதி மீறல்களுக்காக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சிறு வணிகர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறையை அனுமதிப்பது தொடர்பாக, ஜிஎஸ்டி கவுன்சில் விவாதத்திற்கு பிறகே முடிவெடுக்க வேண்டும் என தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் நிதியமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதற்கு முன்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பக்கத்தில் 50 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை  முன்னிட்டு குறும்படம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் ஜிஎஸ்டி முறை அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை கடந்து வந்த பாதை மற்றும் ஜிஎஸ்டி வெற்றிகரமாக அமலாக்கப்பட்ட விதம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதோடு இதுவரை 49 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட்டு சுமார் 1500 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இன்று நடக்கும் 50-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் வெற்றிகரமான வரி விதிப்பு முறையை நடைமுறைபடுத்தியதற்கான முக்கிய மைல்கல் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

முதலில் மத்திய நிதியமைச்சர் 50-ஆவது ஜிஎஸ்டி கவுன்சிலை முன்னிட்டு சிறப்பு தபால் தலையை வெளியிட்டார். இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புற்றுநோய்க்கான மருந்துக்கான ஜிஎஸ்டி வரி விதிவிப்பை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தனியார் நிறுவனங்களின் செயற்கைக்கோள் ஏவுதள சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் ஜிஎஸ்டி விதிமீறல்களுக்காக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சிறு வணிகர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறையை அனுமதிப்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விவாதத்திற்கு பிறகே முடிவெடுக்க வேண்டும் என தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில்,  ஆன்லைன் கேமிங் மற்றும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளன.

வரி விகிதங்கள், விலக்குகள், வரம்புகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் போன்ற ஜிஎஸ்டி தொடர்பான முக்கிய பிரச்னைகளை தீர்மானிப்பதில் கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் விளைவாக பல பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.