அதிமுக கொடியை ஓபிஎஸ் தரப்பு இனிமேல் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு இனிமேல் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு…

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதால் ஓபிஎஸ் தரப்பு இனிமேல் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது;

மாவீரன் அழகு முத்துகோன் இந்திய சுதந்திரத்திற்காக வித்திட்டவர். அழகு முத்துகோன் வீரம் பிரகாசிக்கும் வகையில், அவருக்கு சிலை அமைத்தது ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தான்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். வரும் 18-ம் தேதி கூட்டணியில் அவர் பங்கு பெறுவார் என தெரிவித்துக் கொள்கின்றேன். இன்றைக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக கொடி மற்றும் சின்னம் என்பது அதிமுகவுக்கு மட்டும் சொந்தமானது. இனிமேல் அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த கூடாது . அப்படி பயன்படுத்தினால் அது போர்ஜரி அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசுதான். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போது கொரோனா பரவியதால் நீதிமன்றத்தில் ஓராண்டு வழக்கு விசாரணை தடைப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை நடந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்து இப்போது கோடநாடு வழக்கை விசாரிக்கிறது. அதிமுகவுக்கு இருக்கக்கூடிய ஒரே கேள்வி கோடநாடு குற்றவாளிகளை திமுக வழக்கறிஞர்கள் ஜாமினில் எடுத்தது ஏன் என்பது தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.