நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மறுவெளியீட்டிலும் வசூலைக் குவித்து வருகிறது.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என சினிமா துறையில் இருக்கும் அனைத்து பிரிவுகளையும் கற்றுத்தேர்ந்த பன்முக திறமை கொண்டவர் கமல்ஹாசன். கிட்டதட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் அவர் இந்திய முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் பிக்பாஸ், இன்னொரு பக்கம் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம் என கமல் தொடர்ந்து பரபரப்பான சூழலிலே இருந்து வருகிறார். இதனிடையே 2006-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான இந்த படத்தில் கமாலினி முகர்ஜி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தொடர்ச்சியாக பெண்கள் கொலை, அதனை விசாரித்து உண்மையை தன் பாணியில் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி என க்ரைம் த்ரில்லர் கதையில் காதலும் இப்படத்தில் அமையப்பெற்றிருக்கும். இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் ரசிகர்களை வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 16 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் 23-ம் தேதி நவீன மெருகூட்டலுடன் வேட்டையாடு விளையாடு படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. இப்படம் வெளியான திரையரங்குகள் சனி, ஞாயிறுகளில் ஹவுஸ்புல் காட்சிகளால் நிறைந்து வருகிறது. இந்த மறுவெளியீட்டிலும் இப்படம் வசூலைக் குவித்ததால் இப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கேக் வெட்டி இந்த வெற்றியைக் கொண்டாடினர்.







