ஆதிபுருஷ் திரைப்படத்தை உத்தரபிரதேசத்தில் திரையிட சமாஜ்வாதி, ஹிந்து மகாசபாவை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில், ஆதிபுருஷ் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து அப்படத்தின் போஸ்டர்களை கிழித்து ஹிந்து மகாசபாவை சேர்ந்தோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராமரை கடவுளாக வணங்கும் மக்களின் மனம் புண்படும் வகையில் பல வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், ராம காவியத்தை திரித்து படமாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். அதோடு படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லக்னோ போலீசாரிடம் புகார் அளித்தனர்.
ஆதிபுருஷ் திரைப்பட எதிர்ப்பில் உத்தரபிரதேசத்தின் பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாதியும் களத்தில் இறங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தங்களது அரசியல் எஜமானர்களின் பணத்தை கொண்டு மக்களின் நம்பிக்கையுடன் படக்குழு விளையாடுவதாக குற்றம் சாட்டினார். மேலும் தணிக்கை குழு திருதிராஷ்டிரர் ஆகிவிட்டதா எனவும் வினவியுள்ளார். மகாபாரதத்தில் திருதிராஷ்டிரர் கண்பார்வையற்றவராக இருக்கும் நிலையில் அகிலேஷ் யாதவ் தணிக்கை குழுவை அந்த கதாப்பத்திரத்துடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஷிவ்பால் யாதவ், ராமரின் கதாபாத்திரத்தை சிறுமைபடுத்தும் விதமாக ஆதிபுருஷ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும் கோடிக்கணக்கான சனாதன விசுவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.







