உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் வடிவேலு, ஃப்கத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த ஜூன்1-ம் தேதி இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.
நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படம் தனது நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் என அறிவித்திருந்தார். இப்படம் வருகிற ஜூன் 29-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒஎஸ்டி ஃப்லிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சார்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில், ”உதயநிதி, ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கி, படப்பிடிப்பு 80% நிறைவடைந்து விட்டது. இன்னும் 20% படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளார்.
‘ஏஞ்சல்’ படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். ‘ஏஞ்சல்’ படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி மறுத்து வருகிறார். எனவே, ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். மேலும் 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று ராம சரவணன் மனுவில் தெரிவித்துள்ளார்.







