எதிர்கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்து வருவதாக, பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், எதிர்க்கட்சியினர் தாங்களாக எதையும் செய்ய மாட்டார்கள் என்றும், செய்பவர்களையும் விட மாட்டார்கள் என்றும் விமர்சித்தார். நாட்டிற்கான போரில் உயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவுச்சின்னம் அமைத்தபோதும், அதையும் விமர்சனம் செய்வதில் எதிர்க்கட்சிகள் வெட்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, திருவள்ளூர் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார், மணிப்பூர் கலவரம் குறித்து பேசினார். அப்போது அங்கிருந்த பாஜகவினர் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், எம்பி ஜெயக்குமார், எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆகியோர் பாதியிலேயே வெளியேறினர்.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறுசீரமைப்பு பணி தொடக்க விழாவில், கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், கன்னியாகுமரியில் இருந்து ஹைதராபாத் மற்றும் வேளாங்கண்ணிக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
- பி.ஜேம்ஸ் லிசா