தோல்வி என்பது சாதாரனமான ஒன்று என்றும் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அழைப்பு மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, அண்ணா பொறியியல் மற்றும் இதர பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் சந்தேகங்கள் தொடர்பாக அழைக்கலாம் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
42 ஆயிரத்து 716 பேர் அண்ணா பல்கலைக்கழகம் இதர பொறியியல் கல்லூரிகளில் சேர இணைய வழியில் விண்ணப்பித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜூலை 19-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறினார். CBSE தேர்வு முடிவுகள் வரவில்லை என்றும் அதனால் மாணவர்கள் சேர்க்கை தாமதம் ஆகிறது என்றும் விளக்கமளித்தார். ஆகஸ்ட் 22 ஆம் தேதி சரியாக பொறியியல் கலந்தாய்வு தொடங்குவிடும் என கூறினார்.
CBSE மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வந்த பிறகு 5 நாட்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2-வது வாரம் தேர்வு நடத்தி இந்த ஆண்டே கல்லூரியில் சேர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார் என்றார். அழைப்பு மையம் மூலமாக நேற்று மட்டும் 400 மாணவர்கள் சந்தேங்கங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதிக மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூலை 7 ஆம் தேதி கடைசி நாள் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
1.50 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்பு இடங்களில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், பொறியியல் படிப்புகளில் புதிய பாடத்திட்டங்களை வடிவமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்தில் மாணவர்களுக்கு புத்துணர்ச்சி ஆலோசனை வகுப்புகள் நடத்தப்படும் என்ற அமைச்சர் பொன்முடி, தோல்வி சாதாரமான ஒன்று என்றும் மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
-இரா.நம்பிராஜன்