மேற்கு வங்க சட்டமன்றத்தின் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இரு கட்டமாக நடைபெற்றது. முதல் கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதியும் இரண்டாம் கட்டமாக ஏப்ரம் 29 ஆம் தேதியும் நடைபெற்றது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 92.47 சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இந்த வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் பீப்பிள்ஸ் பல்ஸின் கருத்துக் கணிப்பு மட்டுமே, திரிணாமூல் கட்சி 177-187 இடங்கள் என்ற தெளிவான பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கூறியிருந்தது. மற்ற அனைத்து கருத்து கணிப்புகளும் பாஜகவே மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்திருந்தன.
இந்த நிலைஇல் இன்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது : 2026-ல் நாங்கள் 226 இடங்களைத் தாண்டுவோம். 230 இடங்களைக் கூட தாண்டக்கூடும். மக்கள் வழங்கிய இந்த மாபெரும் மக்கள் ஆணையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வெப்பத்தையும், அச்சுறுத்தல்களையும் மீறி பெருமளவில் திரண்டு வந்த மக்களுக்கு நன்றி.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு மக்களின் பார்வையைத் திசைதிருப்புவதற்கான ஒரு பெரிய சதியின் ஒரு பகுதிதான், இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள். இவை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் மன உறுதியைக் குலைக்கும் நோக்கம் கொண்டவை.
வங்காளத்தை அடக்க முயன்றவர்கள் வாக்குச்சீட்டால் அடக்கப்பட்டுள்ளனர். ஓய்வின்றிப் போராடி, தாக்குதல்களைத் தாங்கிக்கொண்ட கட்சித் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் இருங்கள். வங்காள மக்கள் மீதும், தீது (என்) மீதும் நம்பிக்கை வையுங்கள். மே 4ஆம் தேதி மாலை வரை காத்திருங்கள், உங்கள் பதில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.







