அமெரிக்க இடைக்காலத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) இடம்பெற்றுள்ளது. அணு ஆயுதங்களைக் கொண்ட இரு அண்டை நாடுகளும் போரில் ஈடுபடுவதைத் தான் தடுத்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை உரிமை கோரியுள்ளார், இதற்காக இரு நாடுகளின் மீதும் கடுமையான வரிகளை விதிப்பதாக மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று பல உயிர்களைக் பலிவாங்கிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தியா மே 2025 இல் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடங்கியது. இதனால இரு நாடுகளிடையே போர் ஏற்படுமோ என்ற அச்சம் உலகம் முழுவதும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்திக்கொண்டன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாகவும் அதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறார். இதற்கு இந்தியா பலமுறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புளோரிடாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், கடந்த ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் போரை மேலும் தீவிரப்படுத்தாமல் தடுத்ததற்குக் தான் தான் காரணம் என்று பெருமிதம் தெருவித்துக் கொண்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது, “அந்த இரண்டு அணு ஆயுத நாடுகளும் கோபத்தில் இருந்தன, ஆனால் அவர்கள் சுடுவதை நிறுத்தினர், மேலும் “பதினொரு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” என்று அவர் கூறினார்.
”நீங்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தடுக்கிறீர்கள், இரண்டு அணு ஆயுத நாடுகள்… நான் சொன்னேன், ‘நண்பர்களே, நீங்கள் அப்படிச் செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய மாட்டீர்கள்… நான் உங்கள் மீது பாரிய வரிகளை, 250 சதவீதம் வரை விதிப்பேன், இதன் மூலம் உங்களால் எந்த வர்த்தகமும் செய்ய முடியாது’,” என்று டிரம்ப் கூறினார். இதனால் இந்தியாவும் பாகிஸ்தானும் மிகவும் வருத்தமும் கடும் கோபமும் அடைந்தன, ஆனால் அவர்கள் சுடுவதை நிறுத்தினர், போர் முடிவுக்கு வந்தது என்று அவர் கூறினார்.
மேலும் நான் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளேன். அதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.




