சென்னை மெரினா கடற்கையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மெரினா கடற்கரையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 390 மீட்டர் நீளத்துக்கு மரப்பலகையாலான சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிக்கு என பிரத்யேகமாக 1 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பாதையை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் உடன் நிற்க, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை மெரினா கடற்கரையில் இன்று திறந்து வைக்கப்பட்ட இந்த சிறப்பு பாதையில் மாற்றுத்திறனாளிகள் பலர் சென்று கடலின் அழகை ரசித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “மெரினா கடற்கரை போல், பெசன்ட் நகர் கடற்கரை பகுதியிலும் மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்புப் பாதை அமைக்கப்படும். அதற்காக கடல்சார் ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். சென்னை மாநகரில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள், மீண்டும் ஜனவரி மாதம் தொடங்கப்படும்” என்றார்.







