புதுச்சேரியில் அடுத்த மாதம் மருத்துவக் கல்லூரி திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது கொரோனா நோய்த் தொற்றானது குறைந்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்பாகவே அனைத்து ஆன்மீக தலங்களும் புதுச்சேரியில் திறக்கப்பட்டது. தற்போது இரவு 9 மணி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி உள்ளதால் அடுத்த மாதம் மருத்துவக்கல்லூரி திறக்க வாய்ப்பு உள்ளது எனவும் அதனைத் தொடர்ந்து நோய்த்தொற்றினை கருத்தில் கொண்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறப்பது குறித்துப் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.







